Mamaharishi Eswarapattar Trust

நினைவின் விடுமின் நிர்மூலமாகுமின்
கனவைத் தொலைமின் கடைவெளி புகுமின்

அத்வைதம், துவைதம், வஷிஷ்டா வைதம் ஞானத்தின் பீடமான ஈஸ்வரமகரிசி தவ சிரேஷ்டர்களுக்கு அருளாசி அருளியவர், சற்குரு இரசமணி சித்தர், ஈஸ்வரப்பட்டருடைய மகிமையை எளியேன் அறிந்துள்ளேன். என் இளம் பிராயத்திலிருந்தே. இங்ஙனம் இத்தியானாலயத்தில் தன்னலமற்ற தயை அன்பும், பகுத்தறிவிற்கு பொருத்தமான மெய்ஞான மொழிகளும் என்னைக் காந்தம் போல் கவர்ந்து இழுத்தன.

ஈஸ்வர மகரிஷியின் உறுதியான மொழிகளாலும், உபதேசத்தினாலும் ,நாளுக்கு நாள் மனசாந்தியும், ஆத்மார்த்த அந்தரங்க இரகசியம் இத்தியானாலயத்தில் வருபவர்களுக்கெல்லாம் ஏற்படும் .இப்புவியில் உள்ள அனைவரும் ஆத்ம ஞானத்தை சாதி மத பேதமின்றி பரிபக்குவம் உரியவர்கள் பெற வேண்டுமென்ற சீரிய நோக்கத்துடனும், கொள்கையுடனும் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை என்ற ஓர் ஸ்தாபனத்தை “தியானாலயம் ” சித்தர்கள் ஏற்படுத்தி இதனை ஒரு அன்புத் தொண்டாகவே ஆற்றி வருகின்றோம்.

ஈஸ்வர மகரிஷியின் மகிமையை சுட்டற்ற துணைகொண்டு அளவிட முடியாது சுட்டற்ற மோனத்தைச் சுட்டி உரைக்க வல்லார் யார்?

தன்மயமாய் விளங்கும் பரிபூரண நிலையை எய்திய மோன வள்ளல் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அவர்கள் பரிபக்குவம் அடைந்த சீடர்களுக்கு தமது பாவானா, வாக்கு, தீட்சை மூலம் மோனநிலையை உணர்த்தினார்கள். சதா சகஜ சமாதியில் இருந்து கொண்டு எல்லா நற்பணிகளையும் ஆற்றி வந்தார்கள். மகரிஷி ஈஸ்வரப்பட்டாவின் ஞான வாழ்வு அவர்களை தரிசித்த பக்தர்களுக்கும், மற்றவர்களுக்கும் பெரும் பயனை நல்கியது . மகரிஷி ஈஸ்வரபட்டரின் வாழ்வு தவசிரேஷ்டர்களுக்கு ஓர் முன்மாதிரியாய் அமைந்திருந்தது .

மகரிஷியின் புனித தொடர்பால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர். உலக வாழ்வில் துயருற்றோர் துயர்நீங்கி மறுமலர்ச்சி அடைந்தனர்.

ஞான வழியில் வரும் பெரும் தடைகளை மகரிஷியின் கருணையினாலும் அவருடைய அருளினாலும் எளிதில் தாண்டி மகிழ்ந்தனர் பலர். வேறுயாரிடமும் காண முடியாத ஒருவித தெய்வீகப் பிரகாசம்.

அவர்களிடம் ஜொலித்து கொண்டே இருக்கும். ஞானனுபூதியின் அந்தரங்க நுட்பங்களை வெகு தெளிவாக விளக்குவது மஹரிஷியின் தெய்வீக திருவிளையாடல் ஆகும். மகரிஷி அவர்கள் அருட்பெருஞ்சோதி வடிவம் அமைதியின் இருப்பிடம் தெய்வீக கவர்ச்சியின் காந்தம். மகரிஷிகளின் திருகருணை யாவருக்கும் உண்டாகுக!

அனுபவத்து அறிந்து

உன்னால் அறியப்படும் பொருள் நீ இல்லை. நீ என்னால் அறியப்படாத பொருள் எனில் அது சூனியம், சூனியம் சடமாதலின் நீ இல்லை அறியப்படும் பொருளையும் சூனியத்தையும் அறிவது மெய்யுணர்வு அதுவே நீ உன்னை நீ அனுபவித்து அரி நீ உன் சொல்லளவாகவும் நினைவளவாகவும் போகாமல் உன்னை நீ அனுபவித்து அறிவாய்.

சித்த சுத்தி

நல்லொழுக்கம் உங்களுக்கு சித்தம் சுத்தமடைய செய்கிறது .ஒரு கண்ணாடி பிம்பத்தில் பிரதிபிம்பம் அழுக்கு படிந்து இருந்ததால் சரி வரத் தெரியாது .அது போல சித்தசுத்தி இருக்குமிடத்து ஞானம் சுயமாக பிரகாசிக்கிறது.

மகரிஷியின் கருணையாலும், அவருடைய அருளினாலும் அஞ்ஞானம், சந்தேகம், விபரீதம் போன்றவை நீங்குகின்றன. இதில் அஞ்ஞானமென்பது நமது உண்மையான ஞான சொரூபத்தை அறியாத தன்மை உங்கள் உடலை நீங்கள் பார்க்கின்றீர்கள் உங்கள் ஆத்மாவை (உயிரை ) நீங்கள் பார்த்ததுண்டா சந்தேகமென்பது மகரிஷியின் உபதேச மொழியை நம்பாமலிருக்கும் கலங்கிய மனத்தின் தன்மை விபரீதம் என்பது ஒன்றை வேறொன்றாக பார்க்கும் சித்த விருத்தி.

மகரிஷியின் ஞான உபதேசங்களையும், கருத்துக்களையும் பக்தியுடன் சந்திப்பதால் சந்தேகம் நீங்கும் அப்பொழுது புத்தி தெளிவடையும்.

சித்த சுத்தி

ஆத்மார்த்த அந்தரங்க இரகசியத்தை ஞானத்தினாலே அறிதல் வேண்டும், அடைதல் வேண்டும். நேரான அனுபூதியை பெற தியானம் மிகவும் முக்கியம். ஓர் உருவத்தை பார்க்க கண் எப்படி முக்கியமோ அதுபோல நிரந்திர தியானம் ஞான புத்திக்கு மிகவும் அவசியம். சதா சலித்துக் கொண்டிருக்கும் சிந்தனையை ஒருவழிப் படுத்த இத்தியானாலயத்தை அமைக்க முன் வந்தோம் .இத்தியானாலயத்திற்கு வருவதால் ஓடுஞ்சிந்தனை ஓடாது அமைதிவுறுகின்றது அமைதியுடைய மனத்திற்கு மகத்தான சக்தியுண்டு.இது இத்தியானாலாயத்திற்கு வருவோர் அனைவருக்கும் கிடைக்கிறது. மனம் ஏகாக்கிரம் அடைகின்றது இது ஈசுவர நிச்சியம்.